மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
மியன்மார் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. வேலை வாயப்பு உறுதிமொழியுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனை மறுத்தவர்கள் சித்ரவதையும் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 தமிழர்கள் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனடிப்படையில், இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.



















