பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார்.
உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்துள்ளேன். அதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இராஜினாமாவை ஏற்றுக்கொண்டு லிஸ் ட்ரஸ் வெளியிட்ட கடிதத்தில், ‘அமைச்சக விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவது முக்கியமானது. அமைச்சரவையின் இரகசியத்தன்மை மதிக்கப்படவேண்டும். உள்துறை அமைச்சராக உங்களுடைய சிறந்த பணி பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக க்வாசி க்வார்டெங், வரிக் குறைப்பு உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அமைச்சராக சூவெல்லா பிரேவர்மனும் பதவி விலகியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.



















