சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி இலங்கையில் அரசியல் பொருளாதார விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கடினமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை இனியும் ஒரு தனிமைப்பட்ட நாடாக செயற்பட முடியாது என தெரிவித்துள்ள அவர், நாடு எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதே தமது இந்திய விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல துறைகளில் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியா, எமது பிராந்தியத்தில் அதிக செல்வாக்குச் செலுத்துவதால் இந்தியாவினது நிபுணத்துவம் எமது நாட்டிற்குத் தற்போது அவசியமானதொன்றாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.
பேரழிவு அரசியல் கலாசாரத்தை நிறுத்த வேண்டுமாயின் சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அதற்கு தாம் சர்வதேசத்தின் ஆதரவுடன் தயாராகவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.















