இப்பருவகாலத்திற்கான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி யஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் 471 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஒல்லி போப் மற்றும் ஹர்ரி புருக் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன் 465 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 6 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கேல் ராகுல் 137 ஓட்டங்களையும் ரிஷப் பண்ட் 118 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிஸிலும் இங்கிலாந்தில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இதன்போது ரிஷப் பண்ட் பெற்றுக்கொண்டார்.
பின்னர் 371 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இங்கிலாந்து அணி தனது கடைசி இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. போட்டியின் கடைசி நாளில் 90 ஓவர்களுக்கு 350 ஒட்டங்கள் வெற்றியிலக்காக காணப்பட்ட நிலையில் ஆரம்ப முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வீரர்கள் 82 ஓவர்களில் 5 விக்கட்டினை மாத்திரம் இழந்து இமாலய இலக்கை வெற்றிக்கொண்டு வரலாற்று சாதனையை படைத்தனர்.
இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த பென் டக்கட் ஆட்டநாயகனாக தெரிவானார். 148 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மோசமான தோல்வியை பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியொன்றில் 5 சதங்களை விளாசி போட்டியில் தோல்வியை தழூவிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
அத்தோடு இந்திய அணி நிர்ணயித்த 350 மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை இரண்டு முறை எட்டி இங்கிலாந்து அணி இந்திய அணிக்கெதிராக மகத்தான சாதனைகளை படைத்து அசத்தியிருக்கிறது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.



















