சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 9 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட பலர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பினர் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அதன்படி, எதிர்தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
அதன்படி, மனுதாரருக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனுவை எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.















