தமிழ் திரையுலகில் அனைவராலும் அன்போடு நடிகர் திலகம் என அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இவர், 1927-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விழுப்புரத்தில் பிறந்தார்.
இவர், சிறுவயது முதல் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
இவரது முதல் நாடகம் இராமாயணம். அதில் இவர் சீதை வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் , சித்ரபதி சிவாஜி எனும் நாடகத்தில், வி.சி.கணேசனாக (விழுப்புரம் சின்னய்யா கணேசனாக) அறிமுகமாகி நடித்த பின்னர் அனைவராலும் “சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார்.
அதன்பின்னர் 1952-ஆம் ஆண்டில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சிவாஜி கணேசன்.
அதைத்தொடர்ந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவையே தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
மேலும் நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாக காணப்படுவதுடன் நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன்.
1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.
இந்நிலையில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் திகதி உடல் நலக்குறைவால் அவர் காலமானார்.
அவருடைய 24வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.



















