வரகாபொல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்லையில், திப்போட்டுகொடவில் நடத்தப்பட்ட சோதனையின்போது, “டுபாய் பெத்தும்” என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேக நபரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வரகாபொலவின் பல்லேபுரான் பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவர்களிடம் இருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருள், நான்கு கையடக்கத்தொலைபேசி மற்றும் ஒரு முச்சக்கர வண்டியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த நான்கு சந்தேக நபர்களும் இன்று (22) வரகாபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.














