எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று.
இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா?
மீண்டும் ஓர் ஐநா தீர்மானம் கடந்த ஆறாம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளிலும் இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்த தீர்மானங்களால் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவை என்ன?
கடந்த 16 ஆண்டுகளிலும் போர் முடிந்த கையோடு ஐநா மகிந்தவை பாராட்டியது.வெல்லக் கடினமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்தமைக்காக ஐநாவில் மகிந்தவுக்கு பாராட்டு பத்திரம் கிடைத்தது.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஐநாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மஹிந்த சீனாவை நோக்கிச் சாயத் தொடங்கியது.இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உழைப்பு.
இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவும் 2012இலிருந்து ஐநா தீர்மானங்கள் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக வரத் தொடங்கின.ஆனால் மஹிந்த அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவைத் தோற்கடித்தன.ரணில்-மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தன.அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு கால அவகாசத்தை வழங்குவதற்காக அப்பொழுது நடக்கவிருந்த ஐநா கூட்டத்துடன் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.அக்கூட்டத் தொடரில்தான் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம்-பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்-நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அதாவது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது.
அதன்பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஐநா நிலை மாறு கால நீதிச் செய்முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் 2018 இல் நடந்த யாப்புச் சதி முயற்சி ஒன்றின்மூலம் மைத்திரிபால சிறிசேன நிலைமாறு கால நீதி முன்னெடுப்புகளைத் தோற்கடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி அதனைக் காட்டிக் கொடுத்தார்.விளைவாக நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் இடைக்கால வரைபுடன் நின்று விட்டன.
அந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகளை சுதந்திரன் தோல்வியுற்ற பரிசோதனை என்று சொன்னார்.2021ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான சந்திப்பு வவுனியாவில் நடந்த பொழுது அதில் வைத்து சுமந்திரன் “ஆறாண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்ற பொருள்படச் சொன்னார்.இத்தனைக்கும் அவர்தான் நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி.
நிலைமாறு கால நீதி என்ற கருத்துருவம் நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நாட்டுக்குத்தான் பொருந்தும்.இலங்கையில் அப்படி என்ன நிலை மாற்றம் ஏற்பட்டது? யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் யுத்தத்தை தோற்றுவித்த அரசியல் காரணிகள் அப்படியே உள்ளன.அதற்காக உருவாக்கப்பட்ட படைக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அப்படியே உள்ளன.கடந்த 15 ஆண்டுகளின் பின் மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்கூட இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முடியவில்லை என்பது ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.அந்தச் சட்டத்தை கடந்த மாதம் நீக்க போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது.
எனவே இலங்கைத்தீவில் நிலைமாற்றம் ஏற்படவில்லை.நிலைமாற்றம் ஏற்படாத போது நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிப்பது?அப்படி ஸ்தாபிக்க முற்படுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதி விசாரணை செய்வதுதான்.எனவே நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் தோற்றுப் போனதற்கு மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு குத்துக்கரணம் அடித்தது மட்டும் காரணமில்லை. நிலைமாற்றம் இல்லாத ஓர் அரசியல் சூழலில் நிலைமாறு கால நீதியை அமுல்படுத்தலாம் என்று நம்பியதுதான் தவறு.
அதன் பின் கோத்தபாய வந்தார்.ஐநா மீண்டும் இறுக்கிப்பிடித்தது. முடிவில் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் விளைவாக,ஐநா 2021ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தின்மூலம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை உருவாக்கியது.இந்த அலுவலகமானது இலங்கை தீவில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் இன்று வரை சேகரித்து வருகிறது.கடந்த ஆறாம் தேதி நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானமானது மேற்படி அலுவலகத்தைத் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கின்றது.
எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம் கடந்த 16 ஆண்டுகளிலும் ஐநா மைய தமிழ் அரசியலின்மூலம் கிடைத்தவை எவையெவை என்று பார்த்தால், இடையில் நிறுத்தப்பட்ட பலவீனமான நிலை மாறுகால நீதிச் செய்முறைகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் இவை இரண்டும்தான்.
நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் குறிப்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பொருட்படுத்தவில்லை;நிராகரித்து விட்டார்கள்.அதேசமயம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தைச் சேர்ந்த ஐநா அலுவலர்கள் இலங்கைக்குள் வர இன்றுவரை அனுமதியில்லை.அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் அதுதான் நிலைமை.அந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைக்கூடாகவே பொறுப்புக் கூறமுடியும் என்று அரசாங்கம் கூறிவருகிறது.
இதில் ஐநா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறதா? ஒருபுறம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்.அது பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது. இன்னொருபுறம் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளின்மூலம் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பது.அதாவது குற்றம் சாட்டப்படும் தரப்பையே விசாரிப்பதற்கு அனுமதிப்பது.
மனித உரிமைகள் பேரவையின் மேற்படி நிலைபாட்டை எதிர்த்தே பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணியில் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை எரித்தார்கள்.
கடந்த ஆறாம் திகதி ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக செம்மணி வளைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து அந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்.இப்போராட்டத்தின் முடிவில் செம்மணியில் அணையா விளக்கு இடம்பெற்ற இடத்தில் வைத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை,பாதிக்கப்பட்ட அம்மாக்களால் எரிக்கப்பட்டது.
இதில் ஒரு செய்தி உண்டு. எந்த ஐநாவை தலையிட வேண்டும் என்று கேட்டுத் தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்களோ,எந்த ஐநாவில் நீதி கேட்டு தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ,எந்த ஐநா மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றனவோ,எந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டும் என்று கேட்டு ஒரு சுடரை மூன்று நாட்கள் அணியாமல் ஏற்றி வைத்திருந்தார்களோ,அதே இடத்தில்,அதே ஆணையாளருடைய அறிக்கையைப் பாதிக்கப்பட்ட அம்மாக்கள் ஏரிக்கும் ஒரு நிலைமை.கடந்த 16 ஆண்டு கால ஐநாவை நோக்கிய அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதை அது காட்டுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தை இழக்கத் தொடங்கி விட்டதையும் அது காட்டுகின்றதா ?














