பிரித்தானியாவில் சட்டவிரோதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 60,000 பவுன்சுகள் வரையான அபராதங்களைத் தவிர்க்க சட்ட விரோதமாக போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்த சட்ட உதவியாளர் ஒருவர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹடேர்ஃபீல்டில் (Huddersfield) உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில், ஸோஹைப் ஹுசைன் (Zohaib Hussain) என்ற சட்ட உதவியாளர், ரகசிய ஊடகவியலாளர் ஒருவரிடம், சட்டவிரோதத் தொழிலாளர்கள் தொடர்பான குடியேற்ற அபராதங்களைத் தவிர்ப்பதற்காக 3,500 பவுண்டுகள் கட்டணத்தில் “வணிக ஒப்பந்தங்கள்” உள்ளிட்ட போலி ஆவணங்களைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த விசாரணை ஒளிபரப்பப்பட்ட மறுநாளே, இவரது முதலாளியான RKS Solicitors நிறுவனம் ஸோஹைப் ஹுசைனை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ததுடன், இது குறித்து பொலிஸாரிடமும் புகார் அளித்துள்ளது.
எனினும், ஸோஹைப் ஹுசைன் இதற்கு முன்னர், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தேசிய குற்றவியல் முகவரகம் (NCA) மற்றும் பல பொலிஸ் படைகள் இணைந்து அவசர விசாரணை நடத்துவதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.


















