மத்திய வியட்நாமில் தொடரும் இடைவிடாத மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில், அனர்த்தத்தில் சிக்குண்டு ஒன்பது பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக வியட்நாம் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளம் 52,000க்கும் மேற்பட்ட வீடுகளை மூழ்கடித்ததாகவும், அரை மில்லியன் வீடுகள், வணிகங்களுக்கான மின்சாரத்தை துண்டிக்க வலிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைப் பொழிவு 1.5 மீற்றரை (5 அடி) தாண்டியது, சில பகுதிகளில் 1993 ஆம் ஆண்டு வெள்ள உச்ச நிலையான 5.2 மீற்றரை தாண்டியும் அதிகரித்துள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை அடங்கும்.
அதே போல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் அடங்கும் – இங்கு விவசாயிகள் ஏற்கனவே புயல்களால் அறுவடை நின்றுவிட்டதால் தவித்து வருகின்றனர்.
அண்மைய மாதங்களில் வியட்நாம் மோசமான வானிலையால் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.
கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு புயல்கள் வார இடைவெளியில் பல உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தின.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் டொலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
















