இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முள்ளிமுனை முகத்துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து மரைன் பொலிசார் தீவிரமாக தேடினர்.
இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த தூண்டி கருப்பு (38) மற்றும் வினோத் (31) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.














