நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.
புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். இப்படி ஒரு சந்திப்புக்கு சுமந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு சுரேஷ் பிரமச்சந்திரன் பகிரங்கமாகப் பதில் கூறியதோடு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.
சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.
மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்திவருகிறது. அவ்வாறான ஒரு கருத்தரங்கு வவுனியாவில் நடந்தபோது அதில் சுமந்திரனும் கலந்து கொண்டார்;பேசினார். மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கேட்கின்றன.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட டி.ரி.என்.ஏ ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கூட்டுக்குள் காணப்பட்டது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்பின் ஓர் எழுத்துமூல ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த கூட்டு உருவாக்கப்பட்டது.அப்பொழுது நடந்த ஒர்ஊடகச் சந்திப்பில் கஜேந்திரக்குமார் பின்வருமாறு சொன்னார் “இந்தக் கூட்டு உடையுமாக இருந்தால் அதைத் தமிழ் மக்கள் தாங்க மாட்டார்கள்” என்று.
அவர் ஏன் அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடு தாங்க முடியாத ஒரு புயலில் சிக்கி மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தாங்க முடியாத அந்த உடைவு விரைவில் ஏற்படுமா ?
ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியபோது அந்தக் கூட்டில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின.டி.ரி.என்.ஏ ஓர் இலட்சியக்கூட்டு அல்ல.அந்த கூட்டுக்குள் இருப்பவர்கள் அனைவருமே முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களைச் சேர்ந்த கட்சிகள்.முன்பு தமிழரசுக் கட்சியோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயல்பட்ட கட்சிகள்.பின்னர் தமிழரசுக் கட்சியின் பெரிய அண்ணன் தனத்தால் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியேறிய அல்லது வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள்.
கடந்த ஆண்டு பொது வேட்பாளரை முன்நிறுத்திய கூட்டுக்குள்ளும் மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை காணப்பட்டன.அவர்களுடைய சொந்த வாக்கு வங்கி பலவீனமானது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை அவர்கள் வெல்லமுடியும்.ஆனால் மாகாண சபைத் தேர்தலிலோ, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ பெரிய வெற்றிகளைப் பெறத் தேவையான வாக்கு வங்கி அவர்களுக்கு இல்லை.இந்த விடயத்தில் தங்களுடைய உயரம் என்னவென்று அந்த கட்சிகளுக்கும் தெரியும்.சங்குச் சின்னத்தை தங்களுடையதாக்கியதன் மூலம் தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை. எனவே வெற்றி பெறக்கூடிய கட்சியோடு இணைவதன் மூலம் தான் அவர்களால் எதிர்காலத்தில் கட்சிகளாக நின்றுநிலைக்க முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி இப்போதைக்கு தமிழரசுக் கட்சிதான். எனவே தமிழரசுக் கட்சியோடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இந்தக் கட்சிகளுக்கு உண்டு.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததன்மூலம் அவர்கள் மூன்று உடன் நன்மைகளைப் பெற விரும்பினார்கள். முதலாவது, தங்களைத் துரோகிகள் என்றும் ஒட்டுக் குழுக்கள் என்றும் இந்தியாவின் ஆட்கள் என்றும் பெட்டிகட்டி,முத்திரை குத்திய தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சியோடு கூட்டுக்குப் போவதன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பில் தங்களைப் பற்றியுள்ள முற்கற்பிதங்களை அகற்றலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக் கட்சியோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திராத ஒரு பின்னணியில், தமது பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் இணக்கத்துக்கு போக வேண்டிய தேவை இருந்தது.
மூன்றாவது உள்ளூராட்சி சபைகைளை இயலுமானவரை கைப்பற்றுவது.
இப்பொழுதும் அந்த அடிப்படையில்தான் அவர்களை தமிழரசுக் கட்சியோடு பேச முற்பட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை உறுதிப்படுத்துவது. இப்பொழுது நடக்கும் பேச்சுக்கள் வெற்றி பெறுமாக இருந்தால் அதன் முதல்விளைவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்படும்.அதே சமயம் டி.ரி.என்.ஏ.யும் மதிப்பிறக்கத்துக்கு உள்ளாகும்.
அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் அவர்கள் நம்பத்தக்க சக்திகள் அல்ல, இலட்சிய பாங்கான கட்சிகள் அல்ல என்ற அபிப்பிராயம் எண்பிக்கப்படும்.ஏற்கனவே பொது வேட்பாளர் விடையத்தில் சங்குச் சின்னத்தை எடுத்ததன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிவில் சமூகங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயல்படச் சம்மதித்தார்கள்.இப்பொழுது தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதன்மூலம் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையுடனான தமது உறவைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.அதன் மூலம் எதிர்காலத்தில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத தரப்பு இது என்ற முற்கற்பிதம் மேலும் நிரூபிக்கப்படும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் அவர்களைக் கைவிடுமாக இருந்தால்,அல்லது கூட்டமைப்பாக செயற்பட்ட காலகட்டங்களில் மேடைகளில் பகிரங்கமாகவே அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்தது போல இனிமேலும் அழைப்பார்களாக இருந்தால், டி.ரி.என்.ஏ என்ற கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?
இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கஜேந்திரகுமார் கூறியது போல,தமிழ்த் தேசியப் பேரவையுடனான அவர்களுடைய இணக்கம் உடையுமாக இருந்தால்,அதைத் தமிழ் மக்கள் தாங்குவார்களோ இல்லையோ டி.ரி.என்.ஏ. தாங்குமா என்ற கேள்வி உண்டு.
மாகாண சபைத் தேர்தலை நோக்கி மேற்படி சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இப்பொழுதும் சந்தேகம்தான். புயலுக்கு பின்னரான அரசியல் சூழலானது ஒரு தேர்தலை வைக்கத் தக்கதாக இல்லை. ஏற்கனவே அரசாங்கம் புயலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாகாணங்களின் எல்லைகளை மீள நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதனால் அதற்கு கால அவகாசமும் கேட்டது.இப்பொழுது புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கேட்க வாய்ப்பு உண்டு.இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு வைக்கலாம்.
அப்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அது தமிழ்த்தரப்பின் பாவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையுமா? இப்போதைக்கு தமிழரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன. ஆனால் அதில் அர்ஜுனாவும் களமிறங்கி இளஞ்செழியனும் களமிறங்குவாராக இருந்தால், அவர் தமிழரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கவில்லை என்றால்,அப்பொழுது தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்களின் பருமன் குறையும்.அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு முன்னேறும்.
எனவே நடக்குமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தேர்தலை நோக்கி,ஏற்கனவே இருந்த ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியோடு இணங்கிப்போவது என்று டி.ரி.என்.ஏ முடிவெடுக்கமாக இருந்தால்,அது கஜேந்திரக்குமார் சொன்னதுபோல, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள மிகப் பலவீனமான ஒரு ஐக்கியத்தின் முடிவாக அமையும். ஆனால் அதை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஏனென்றால் முள்ளிவாய்க்காலை கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு இனி எதிர்காலத்தில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்; தாங்கிக் கொள்ள முடியாத காயம்; தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்று எதுவும் கிடையாது.














