அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமான இன்று, அவுஸ்திரேலிய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் (Nathan Lyon ) வலது தொடை தசைநார் காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
களத்தடுபில் ஈடுபட்டிருந்த 38 வயதான நாதன் லியோன், ஒரு பந்தைத் துரத்திச் சென்று டைவ் செய்து, பவுண்டரி ஒன்றை தடுக்க முயன்ற போது காயத்துக்கு உள்ளானார்.
இதனால் அவர், மதிய நேர உணவு இடைவேளைக்கு சற்று முன்பு, தனது காலைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
நாதன் லியோன் காயமடைந்ததை அடுத்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அத்துடன், லியோன் தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இனி அவர் பங்கேற்பது சந்தேகம் என்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா பின்னர் கூறியது.
இந்த அறிவிப்பானது அவுஸ்திரேலிய அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸுகளிலும் நாதன் லியோன் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரைக் கைப்பற்றுவதற்கான வெற்றியின் விளிம்பில் அவுஸத்திரேலியாவை நிறுத்தினார்.
நாதன் லீயோன் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கு நீக்கப்பட்டால் அவுஸ்திரேலிய அணியின் சக சுழற்பந்து வீச்சாளரான டாட் மர்பி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் அல்லது கோரி ரோச்சிசியோலி ஆகியோர் அடுத்த போட்டிகளுக்காக அணியில் உள்வாங்கப்படலாம்.
நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்குவதுடன், இறுதியும் ஐந்தாவதுமான டெஸ்ட் போட்டி 2026 ஜனவரி 4 அன்று தொடங்கும்.















