பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை மனித உரிமைகள் மீறலாகும் என குற்றஞ்சாட்டி, திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளைச் செய்துவரும் தங்களது சேவையை கணக்கில் எடுக்காமல், நிரந்தர நியமனம் வழங்காமல் இருப்பது அநியாயம் என்றும், இது தொழில் பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகளுக்கு முரணானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கல்வித் துறையில் தொடர்ந்தும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தங்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பெரும் அநீதியாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த விவகாரத்தில் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சட்டபூர்வமான மற்றும் ஜனநாயகப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் முறைப்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.















