கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16 எனும் முகவரியில் வசிக்கும் பந்துல சித்ரானந்த என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், தனியார் நிறுவனம் ஒன்று நேற்று யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், பரவிபாஞ்சான் குளத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் குழிகள் தோண்டிய போது, மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பழைய கைக்குண்டு வெளிப்பட்டுள்ளது.
யானை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரால், கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விபரங்களை இன்று (11) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் அறிக்கையிட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












