பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை.
ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது.
முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம் என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன.
ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில் காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன.
ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன.
“உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார்.
ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது.
இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை.
தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள்.
ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு.
அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை.
ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது?
ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை.
ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார்.
இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்?
ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு.
கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக் கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது.












