றாகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (23) இதனைத் குறிப்பிட்டார்.
இதேவேளை, றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாகவும் கல்வி நகரமாகவும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
ஜா-எல நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள றாகம சுகாதார நகரத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குச் சட்டவிரோத கட்டுமானங்கள் தடையாக உள்ளதுடன்
சுமார் ஆறு பேர் வரையில் இதனை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அங்கு சென்றபோது கூட சோதனையிட அவர்கள் இடமளிக்கவில்லை என்பது கலந்துரையாடல்களின் போது தெரியவந்தது.
பழைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவர்கள் செயற்படுவதாகவும் இது றாகம நகர அபிவிருத்திக்கு தடையாகும் எனவும் எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
றாகம நகரத்தை ஒருபுறம் சுகாதார நகரமாக மேம்படுத்த முடியும். அதேபோல் கந்தானை பகுதியில் தாதியர் பாடசாலை ஒன்றும் உள்ளது. எனவே, இது ஒரு கல்வி மையமாகவும் மாறும்.
றாகம என்பது பல்வகை போக்குவரத்து சேவைகளைக் கொண்ட ஒரு இடமாகும்.
அங்கு புகையிரத நிலையம் உள்ளது, பேருந்து போக்குவரத்து சேவைகள் உள்ளன. எனவே, றாகம நகரத்தில் பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.















