வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இன்று பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலையில் இவற்றில் கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை மேம்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், கூடுதல் சேவைகளை வழங்கி அதற்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, மேனஸ் என்ற ஏஐ நிறுவனத்தை சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு வாங்கிய மெட்டா, அதனை பயன்படுத்தி அதிக அளவில் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சந்தா செலுத்தும் பயனாளர்கள் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் பின் தொடரலாம் என்றும், தங்களை பின் தொடராத நபர்களின் ஸ்டோரிகளை பார்க்கும் வகையிலும் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தியாவசிய தகவல் பரிமாற்ற சேவைகள் கட்டணமின்றி தொடரும் என்றும், ஏஐ உதவியை நாடுவதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மெட்டா நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















