டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்ததால் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட (U-19) அணியும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இளையோர் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் வெளியேறியுள்ள நிலையில், அதன் தோல்விக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் திட்டமிடப்பட்ட ‘கடுமையான பயண அட்டவணையே’ காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் சாடியுள்ளனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் ஹபிபுல் பஷார் இது குறித்துக் கூறுகையில், “வீரர்கள் சோர்வடைவதைத் தவிர்க்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது சொந்த பணத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்குச் செலவிட வேண்டியிருந்தது” எனத் தெரிவித்தார்.
மற்றைய முன்னணி அணிகளின் பயண அட்டவணை மிகவும் இலகுவாக இருந்ததாக பங்களாதேஷ் குற்றம் சுமத்துகிறது.
இந்தியா தனது அனைத்துப் போட்டிகளையும் ஒரே இடத்தில் (புலவாயோ) விளையாடியது.
அவுஸ்திரேலியா தனது பெரும்பாலான போட்டிகளை நமீபியாவின் வின்ட்ஹோக் நகரிலேயே விளையாடியது.
இங்கிலாந்து சுப்பர்-6 போட்டிகளுக்கு முன்னதாக நான்கு நாட்கள் போதிய ஓய்வு வழங்கப்பட்டது.
“நாங்கள் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முறையிட்டோம், ஆனால் அவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை” என ஹபிபுல் பஷார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
















