ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை (Andrew Mountbatten-Windsor) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர் சாட்சியமாக வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் (Gloria Allred t) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூவிடம் உதவி கோரி அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை அணுகியதைக் காட்டுகின்றன.
இதில் 2020-ஆம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் (Home Office) விடுக்கப்பட்ட முறையான கோரிக்கையும் அடங்குகிறது.
அரண்மனை வட்டாரங்கள் “தகவல் தெரிந்த எவரும் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும். ஆனால் அது ஆண்ட்ரூவின் மனசாட்சியைப் பொறுத்தது,” எனத் தெரிவித்துள்ளன.
இதேவேளை, 2019-இல் பிபிசி நேர்காணலில் ஒரு மணிநேரம் பேசத் தயாராக இருந்தவர், சட்ட அமலாக்கத் துறையினரிடம் பேச ஏன் மறுக்கிறார்?” என்று இளவரசர் ஆண்ட்ரு வை நோக்கி வழக்கறிஞர் ஆல்ரெட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் “பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நாம் நிற்க வேண்டுமானால், தகவல் தெரிந்த எவரும் அதனைப் பகிரத் தயாராக இருக்க வேண்டும்,” என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் விவகாரத்தில் சாட்சியமளிக்க அழுத்தம் எதிர்கொள்ளும் நபர் ஆண்ட்ரூ மட்டும் அல்ல.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் காங்கிரஸ் விசாரணையில் சாட்சியமளிக்க தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
முன்னதாக அவர்கள் இதை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி நிராகரித்திருந்த நிலையில், தற்போது உடன்பட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க நீதித்துறைக்கும் ஆண்ட்ரூவின் சட்டக் குழுவிற்கும் இடையே 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்தன. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
தன்னார்வ அடிப்படையில் நேர்காணல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் முடிந்துவிட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனால், அமெரிக்கா தனது பிரித்தானிய சகாக்களிடம் முறையான உதவியைக் கோரியது.
கடந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்க காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர் விதித்த காலக்கெடுவிற்கும் ஆண்ட்ரூ தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் வெளியிடப்படுவது குறித்து அரண்மனை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை தாங்கள் புரிந்துகொள்வதாக
பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது.
மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னர் மற்றும் அரசியின் ஆழ்ந்த அனுதாபங்கள் எப்போதும் உண்டு எனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆண்ட்ரூ இதுவரை எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்தும் மறுத்து வருவதுடன்
சாட்சியமளிப்பதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














