ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்தைகளுக்காக சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. நேற்றைய தினம் முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்து இன்று இரண்டாவது நாள் பேச்சுலார்த்தை ஆரம்பமாகியது.
ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky) தலைமை தாங்கினார் புசுரு இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவரான அட்மிரல் இகோர் கோஸ்ட்யுகோவ்வும் இணைந்திருந்தார்.

யுக்ரைனின் தேசிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ருஸ்டம் உமேரோவ், (Rustem Umerov) மீண்டும் தலைமை பேச்சுவார்தையாளராக செயற்பட்டார்.

மத்திய கிழக்கு மற்றும் துருக்கியில் முந்தைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஒரு ஐரோப்பிய நாட்டில் யுக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை யுக்ரைனும் ஸெலென்ஸ்கியும்தான் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது.
இந்நிலையில் சந்திப்புகள் உண்மையில் கடினமாக இருந்தன, மேலும் ஏற்கனவே இறுதி கட்டத்தை எட்டியிருக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளை ரஷ்யா இழுத்தடிக்க முயற்சிப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெலென்ஸ்கியின் கருத்துகளுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான RIA செய்தி வெளியிட்டது.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடந்த மன்றில் ரஷ்ய தலைமை பேச்சாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி செய்தியாளர்களிடம், திகதி குறிப்பிடாமல் மேலும் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ச்சியாக பேச்சுவார்தைகள் மூலமே தீர்வுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
யுக்ரேனிய தூதுக்குழுவின் தலைவர் ருஸ்டெம் உமெரோவ், முக்கியதுவம் வாய்ந்ததாக பேச்சுவார்த்தை அமைந்திருந்தது. மேலும் பேச்சுவார்த்தை நடத்தி இதனை முடிவுக்கு கொண்டுவருவோம் என தெரிவித்தார்.

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஜெனீவா கூட்டம் நடைபெற்றது, கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினைகளில் இரு தரப்பினரும் ஒரு ஒருங்கிணைந்த முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.















