2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதி சூப்பர் எட்டு போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை அணி ஐந்து ஓட்டங்கள்வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
தோல்விக்குப் பின்னர் இந்த அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரிடமிருந்து உத்தியோகப்பூர்வமாக வந்தது.
போட்டியின் இணை நடத்துனராகவிருந்த இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் தங்களது 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் நிறைவுக்கு கொண்டுவரத் தவறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய தோல்வியின் பின்னர் தனது தீர்மானத்தை அறிவித்த சனத் ஜெயசூர்யா, இந்த முடிவு சிறிது காலமாகவே தனது மனதில் இருந்து வந்ததாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரின் போது நீண்ட காலத்திற்கு தனது பதவியில் தொடர விரும்பவில்லை என்று குறிப்பிட்டதாகவும் கூறினார்.
அது குறித்து மேலும் கூறிய அவர்,
அந்தப் பட்டத்தை (தலைமைப் பயிற்சியாளர்) வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து தொடரின் போது நான் இந்த பதவியை தொடரும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டேன்.
எனவே, அந்த முடிவை எடுத்த பிறகு அதைச் சொன்னேன்.
உலகக் கிண்ணத்துக்குப் பிறகு, நான் நல்ல மனநிலையில் இங்கிருந்து பயிற்சியாளராக வெளியேற முடியும் என்று நினைத்தேன்.
நான் நினைத்த அளவுக்கு அதைச் செய்ய முடியவில்லை.
அதைப் பற்றி நான் வருந்துகிறேன்.
எனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் எனது தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் தெரிவிக்கவில்லை.
நான் அவர்களுடன் சென்று விவாதிக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேச வேண்டும் – என்றார்.













