கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு (04) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தொடக்க ஆட்டக்காரர் ஃபின் அலன் வெறும் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியானது எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தது.
அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஓட்டங்களை பெற்று வெளியேற மார்கோ ஜோன்சன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை ஓட்டக் குவிப்பில் தென்னாப்பிரிக்காவை சரிவிலிருந்து மீட்டது.
11 ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களுடன் தடுமாறிய தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை மீண்டும் உயிர்ப்பிக்க, ஜோன்சன் தனது 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.

இவர் தவிர டெவால்ட் பிரெவிஸ் 34 ஓட்டங்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்சி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கினை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் அலன் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்காக 9.1 ஓவர்களில் 117 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
டிம் சீஃபர்ட் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்தார்.
அவரின் ஆட்டமிழப்பினை அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவுடன் கைகோர்த்த பின் அலன் 33 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக சதம் விளாசினார்.
தென்னாப்பிரிக்காவின் தரப்பில் ககிசோ ரபாடா (1/28) மட்டுமே விக்கெட் வீழ்த்தினார்.

இந்த சதம் மூலம் ஃபின் அலன் சர்வதேச டி:20 உலகக் கிண்ண அரங்கில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.
மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம், வேகமான ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை பதிவு செய்திருந்தார்.
ஆனால் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையை முறியடித்தமையும் குறிப்பிடத்தக்கது.














