நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கார் விபத்தில் 7 இந்திய பக்தர்கள் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற மனகமனா கோவிலில் வழிபாடு முடிந்து யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 07 இந்தியப் பயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 09 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 07 பேர் இந்திய யாத்ரீகர்கள், மீதமுள்ள இருவரும் நேபாளத்தைச் சேர்ந்த சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆவர். இவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் மேற்கே உள்ள ஷாஹித் லகான் கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.நேபாளத்தின் மலைப்பாங்கான மற்றும் குறுகிய வீதிகள், போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள் ஆகியவற்றின் காரணமாக அங்கு பஸ் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
கடந்த மாதம் இதேபோல் நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் பிரித்தானியர் உட்பட 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.















