வேல்ஸில் (Wales) கிரேஹவுண்ட் (Greyhound) நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கும் சட்டமூலம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் (Senedd) வாக்கெடுப்பிற்கு வரும் நிலையில் இந்தத் தடைக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என அதிகாரிகள் அமைச்சர்களை எச்சரித்திருந்த விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
வேல்ஸ் அரசாங்கம் கிரேஹவுண்ட் பந்தயங்களைத் தடை செய்வதற்கான மசோதாவை இன்று நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இது குறித்து அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கிய சிவில் சமூக அதிகாரிகள், பந்தயங்களைத் தடை செய்வதற்குப் பதிலாக நாய்களின் உரிமையாளர்களுக்கு ‘உரிமம்’ (Licensing) வழங்கும் முறையையே பரிந்துரைத்தனர்.
பந்தயங்களைத் தடை செய்வதற்குப் போதுமான மற்றும் வலுவான ஆதாரங்கள் (Robust evidence) சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
விலங்குகள் நல அமைப்புகளின் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின்னர், லிபரல் டெமக்ரட் கட்சி உறுப்பினர் ஜேன் டோட்ஸுடன் (Jane Dodds) ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தடையை அரசாங்கம் முன்னெடுத்தது.
வேல்ஸில் தற்போது கெய்ர்பிலி (Caerphilly) மாவட்டத்தில் உள்ள ‘வேலி கிரேஹவுண்ட்ஸ்’ (Valley Greyhounds) என்ற ஒரே ஒரு பந்தயத் தளம் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தத் தடைச் சட்டம் முறையான கலந்தாய்வு (Consultation) இன்றி கொண்டுவரப்பட்டதாக கிரேஹவுண்ட் போர்டு ஆஃப் கிரேட் பிரிட்டன் (Greyhound Board of Great Britain’s) (GBGB) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதிகாரிகளும் முன்னரே எச்சரித்தது போல, முறையான கலந்தாய்வு இல்லாதது அரசாங்கத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும், நீதிமன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாகவுள்ளது.
இதேவேளை, கடந்த ஆறு ஆண்டுகளில் 2,700-க்கும் மேற்பட்ட நாய்கள் பந்தயங்களின் போது உயிரிழந்துள்ளதாகவும், எனவே இந்த விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்றும் டோக்ஸ் டிரஸ்ட் (Dogs Trust) போன்ற அமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் போதிய ஆதாரங்கள் இன்றி அரசாங்கம் இந்தத் தடையை அவசரமாக அமல்படுத்துவதாக கிரேஹவுண்ட் போர்டு ஆஃப் கிரேட் பிரிட்டன் குற்றம் சாட்டுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2027 முதல் 2030-ஆம் ஆண்டிற்குள் வேல்ஸில் கிரேஹவுண்ட் பந்தயங்கள் முழுமையாகத் தடை செய்யப்படும்.
தொழிற் கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளிக்கவுள்ள நிலையில், ஏனைய கட்சிகள் தங்களது உறுப்பினர்களுக்குச் சுதந்திரமான முறையில் வாக்களிக்க (Free vote) அனுமதி வழங்கியுள்ளன.













