தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு முன்னதாக அமைக்கப்படும் கூட்டணிகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்றும், பொதுவான அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காகவே இவை உருவாக்கப்படுவதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதைத் தடுக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.













