ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஊடகப்பேச்சாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஊடகப்பேச்சாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று (மார்ச் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்க-சியோனிச தரப்பு விடியற்காலையில் நடத்திய கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி தியாகியானார்” என காவல்படையின் ‘செபா நியூஸ்’ இணையதளம் தெரிவித்துள்ளது.
கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நைனி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, போர்ச் சூழலிலும் ஏவுகணை உற்பத்தி தடையின்றி நடப்பதாகவும் அவர் பெருமிதம் கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த ஒரே வாரத்தில் ஈரான் இராணுவ மற்றும் அரசியல் தலைமைக்கு ஏற்பட்டுள்ள நான்காவது பெரிய பின்னடைவு இதுவாகும்.
முன்னதாக இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி (Ali Larijani)
பாசிஜ் (Basij) படைத் தலைவர் ஜெனரல் குலாம்ரெசா சொலைமானி (Gholamreza Soleimani)
உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் (Esmail Khatib)ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர்.
ஈரானின் உயர்மட்டத் தலைமைகளை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இத்தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பெப்ரவரி 28 முதல் இருதரப்பிற்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த வாரம் ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ எரிவாயு வயல் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி (LNG) ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தொடர்ந்து எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கினால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு வயல்களையும் “ஒட்டுமொத்தமாகத் தகர்க்கப்போவதாக” எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













