ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவின் நிர்மலில் இருந்து நெல்லூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்தில் சிக்கியது.
லொறியுடனான மோதலைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, இதனால் பல பயணிகள் அதனுள்ளேயே சிக்கி உடல் கருதி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சுமார் 20 பயணிகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தற்சமயம் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மார்க்கபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஆந்திரப் பிரதேச பேருந்து விபத்து குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாவும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.















