நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் இளம் தலைமுறையினரின் தொழில்நுட்பத் திறன்களைச் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதனை நோக்கமாகக் கொண்டு, கொழும்பு புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் இன்று 28 நடைபெற்ற ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்றதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வளர்ச்சியாகும். “Robots Meet Culture” (ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன) எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டதோடு, உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் நவீன பொறியியல் துறைகளை ஒருங்கிணைத்த அவர்களது புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:
“வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக அமைய வேண்டும். உலக ரோபோ ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகள், எமது இளம் தலைமுறையினருக்குத் தர்க்க சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அத்தியாவசியத் திறன்களைப் பயிற்சி செய்வதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.
2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை முதன்முறையாக இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எமது பிள்ளைகளுக்குக் கிடைத்த மிக முக்கியமானதொரு அனுபவமாகும். நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகள் உரித்தாகும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்” எனக் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.













