ஈஸ்டர் வங்கி விடுமுறை வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெரும் பகுதிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது வங்கி விடுமுறை வார இறுதியைக் கொண்டாட விரும்பிய பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கைகளுக்கு அமைவாக, ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த காற்று குறித்த எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.
குறிப்பிட்ட திறந்தவெளிப் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
பலத்த காற்றினால் சில சேதங்களும் பயண இடையூறுகளும், மின்வெட்டும் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிப்பும் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தினம் முழுவதும் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஆர்க்னி மற்றும் ஷெட்லாந்து தீவுகள் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை இரண்டாம் நிலை காற்று எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
இந்தத் தீவுகளில் மணிக்கு 60 முதல் 70 மைல் வேகத்தில் உச்சபட்ச காற்று வீசக்கூடும் என்றும், சில திறந்தவெளிப் பகுதிகளில் 75 முதல் 85 மைல் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.













