தனது இராணுவக் கப்பல்களும் விமானங்களும் ஈரானைச் சுற்றி நிலைத்திருக்கும் என்றும், வொஷிங்டனுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரமப் புதன்கிழமை (08) எச்சரித்தார்.
எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை, அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், இராணுவ வீரர்கள், மேலதிக வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலைத்திருக்கும் என்றும் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் நேற்றைய தினம் லெபனான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என்று ஈரான் முன்னதாக புதன்கிழமை கூறியிருந்தது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து இரு தரப்பினரும் பெரும் கருத்து வேறுபாட்டில் இருப்பதாகத் தோன்றியது.
யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார், ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி யுரேனியம் செறிவூட்டுவதைத் தொடர ஈரானுக்கு அனுமதி உண்டு என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.













