வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பதிவு எண்கள் உரிய தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்றால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீரா இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதை வெளிப்படுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத பதிவு எண்களைப் பயன்படுத்தும் வாகனங்கள், காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டு, ரூ. 15,000 முதல் 25,000 வரை அபராதத்திற்கு உட்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்.
கடந்த காலங்களில் புதிய வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அது வரும் வாரங்களில் சரிசெய்யப்படும்.
வாகன இலக்கங்களை சரியாகப் பொருத்தும் முறை குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணைாயளர் நாயகம் வாகன உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலையின்படி, முன்பக்க வாகன இலக்கத் தகடுகளில் வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களும் எண்களும், மற்றும் பின்பக்க இலக்கத் தகடுகளில் மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துக்களும் எண்களும் இருக்க வேண்டும்.
இருப்பினும், வாகனப் பதிவு எண்கள் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவமைப்புகளிலும் மாற்றப்படுவது அதிகரித்துள்ளதாகவும், அத்தகைய மாற்றங்கள் விபத்துகள் அல்லது குற்றச் சம்பவங்களின்போது வாகனங்களை அடையாளம் காண்பதைக் கடினமாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















