2007 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பயணத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் தொடக்கமாக, மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் அமெரிக்கா சென்றடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை (27) மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமானத் தளத்திற்கு வந்தடைந்த அரச தம்பதியினரை, அமெரிக்க நெறிமுறைத் தலைவர் மோனிகா க்ரௌலி மற்றும் அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதர் சர் கிறிஸ்டியன் டர்னர் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள் ஓடுபாதையில் வரவேற்றனர்.
பின்னர், இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு மலர்களை வழங்கினர், அதைத் தொடர்ந்து ஒரு இசைக்குழு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களை இசைத்தது.
பின்னர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் ஆகியோரால் அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

சனிக்கிழமையன்று வொஷிங்டன் டி.சி-யில் ஜனாதிபதி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் செவ்வாய்க்கிழமை அன்று (28) அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றவுள்ளார்.
1991 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்குப் பிறகு இத்தகைய உரையை ஆற்றும் முதல் மன்னர் இவரே ஆவார்.
பெரும் சர்வதேச சவால்கள் நிலவும் காலங்களில், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க நாம் முன்னெப்போதையும் விட ஒன்றுபட்டு நிற்பது மிகவும் அவசியம் என்று மன்னர் தனது உரையில் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸில் அவர் ஆற்றும் உரையில், அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கூட்டாண்மையில் நல்லிணக்கத்தையும் புதுப்பித்தலையும் வலியுறுத்துவதோடு, சகிப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களுக்காகவும் வாதிடுவார் என கூறப்படுகிறது.
ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த அரசுமுறைப் பயணம், அமெரிக்கா தனது 250 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த ஆண்டில், உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.












