வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும் கொழும்புக்குள் ஒரு விசேட போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கொழும்புக்கு வரும் வாகன அணிவகுப்பின் போதும், மீண்டும் மே 8 ஆம் திகதி காலை மற்றும் மாலை வேளைகளில் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கான வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த விசேட போக்குவரத்து செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, மே 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
முக்கியப் பிரமுகர்களின் பயணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக, கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் செல்லத் தடை விதிக்கப்படும்.
ஏனைய வாகனங்கள் வாகன அணிவகுப்பு செல்லும் போது தற்காலிகக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
குறிப்பிட்ட நேரங்களில், வாகன ஓட்டிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பொலிஸார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.














