ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் விபரங்களை முன்வைத்தனர்.
அதனை ஆராய்ந்த நீதவான் பசான் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட விசேட சட்ட மருத்துவக் குழுவின் மூலம் பிரேத பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும். எனவும் பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்த விரிவான அறிக்கையை எதிர்வரும் மே 12-ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
சர்ச்சைக்குரிய நிதி மோசடி வழக்குகள் தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன, நேற்று (08) காலை கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணம் இயற்கையானதா அல்லது ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், இன்றைய பிரேத பரிசோதனை முடிவுகள் இந்த வழக்கின் போக்கை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மரணப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இது குறித்து உறுதியான கருத்தை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது மரணப் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. அதன் பின்னர் சட்டவைத்திய அதிகாரிகள் விடயங்களைத் தெளிவுபடுத்துவார்கள். இச்சம்பவம் குறித்து பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.”
கேள்வி: நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதே அவரைக் கைது செய்திருந்தால் இது நடந்திருக்காது அல்லவா?
பதில்: “பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் நேற்றைய பின்னரே பொலிஸாருக்கு இது குறித்துத் தெரியவந்தது. இரவுக்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று பொலிஸார் நினைத்திருக்க மாட்டார்கள். மறுநாள் காலையில் அவரைக் கைது செய்யத் திட்டமிட்டிருக்கலாம். அவர் ஏற்கனவே பொலிஸ் காவலில் இருந்து விடுதலையான ஒருவர், நீதிமன்ற உத்தரவும் இருந்தது. இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் வினவுங்கள். எவ்வாறாயினும், இது தொடர்பாக இப்போது உறுதியான கருத்தைக் கூற முடியாது. மரணப் பரிசோதனையின் பின்னரே எதனையும் கூற முடியும்.” என்றார்.
















