அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், கடந்த மே 09 ஆம் திகதி காரைதீவு வெட்டுவாய்க்கால் பாலம் அருகே திடீர் வீதித் தடையை அமைத்து இந் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சோதனைக்கு உட்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபர் 41 வயதுடைய புத்தளம், உடப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் காரைதீவு பகுதியில் தற்காலிகமாக வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்கு பயன்படுத்திய கைப்பேசி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
முதல் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் தங்கியிருந்த காரைதீவு பகுதியிலுள்ள வாடகை வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு தங்கியிருந்த 31 வயதுடைய கல்முனை பகுதியைச் சேர்ந்த மற்றொருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதன்போது, 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தலால் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 80,000 ரூபாய் பணம், போதைப்பொருள் எடையை அளப்பதற்காக பயன்படுத்திய சிறிய மின்தராசு, இரண்டு கைப்பேசிகள் என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் வழக்குப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கும் அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவிற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.










