அதிகபட்ச சில்லறை விலையை மீறி, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வழக்கு நேற்று (13) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மாத்தறை மாவட்ட அலுவலகம் நடத்திய சோதனைகளின் போது இந்த மோசடி தெரியவந்தது.
விசாரணையில் குறித்த ஹோட்டலில் ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாவாக இருந்தபோதிலும், அது 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தல் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையான 70 ரூபாவுக்கு பதிலாக 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.













