தனித்துவமான பொன்னிறத் தலைமுடிக்காக ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்ட, அரிதான வெண்நிற எருமை பங்களாதேஷ் அரசாங்கத்தின் இறுதி நேர தலையீட்டின் காரணமாக ஈத் அல்-அதா பெருநாள் பலிகொடுப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.
சுமார் 700 கிலோ கிராம் எடையுள்ள அந்த விலங்கு முன்னதாக இஸ்லாமிய சடங்கு ரீதியான நிகழ்வுக்காக பலி கொடுப்பதற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
எனினும், பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்ததைத் தொடர்ந்தும் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டியும் அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு வியாழக்கிழமை (28) நடைபெறவிருந்த திருவிழாவிற்கு முன்னதாக குறித்த எருமையை காப்பாற்றியுள்ளதாக பங்களாதேஷ் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமட், எருமையைக் காப்பாற்றவும், அதனை வாங்கிய உரிமையாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும், அந்த விலங்கை டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றவும் உத்தரவிட்டார்.
வழக்கமான ஈத் பண்டிகைக் கொள்முதலாகத் தொடங்கிய ட்ரம்ப் எருமையின் காணொளிகள் வைரலான பிறகு விரைவாக நாடு தழுவிய ஆர்வமாக மாறியிருந்தது.
இதையடுத்து, குறித்த எருமையின் அலைபாயும் பொன்னிற முடியையும் அமைதியான குணத்தையும் காண்பதற்காக தொலைதூரங்களில் இருந்து பங்களாதேஷ் பண்ணைக்கு பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.













