காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கெதர பகுதியில் அண்மையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், பண்டாரகம பொலிஸ் பிரிவின் மில்லகஹ சந்தியில் வைத்து நேற்று (29) பிற்பகல் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 810 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்திற்கு போலியான இலக்கத் தகடுகளைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், கடந்த 23ஆம் திகதி வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 12ஆம் திகதி காலை 7:30 மணியளவில், காலி தங்கெதர பகுதியில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர், அங்கிருந்த நபர் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் உடனடியாகக் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பிரதான துப்பாக்கிதாரி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் உள்ளூர் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.













