குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,
குவைத்தின் பிரதான விமான நிலையம் (T1) மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குவைத்திற்கான இலங்கைத் தூதர் கலாநிதி லக்ஷித ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் திணைக்களத் தலைவர் எம். ஆர். சி. பி. ஏகநாயக்க ஆகியோர் பார்வையிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்தபோது சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், கீழே விழுந்த கண்ணாடிச் சில்லுகளால் அவர்களுக்குத் தலை மற்றும் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தூதர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் யாருடைய நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், அவர்கள் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, தற்போதைய நிலவரம் தொடர்பாக குவைத் அரசாங்க அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலில் 63 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.
தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.












