உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், கூடுதல் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்காக ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’என்ற புதிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை அதன் தாய் நிறுவனமான மெட்டா (Meta) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சிறப்புச் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்கள், மாதத்திற்கு ரூபா 299 கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியானது தற்போது மிக அதிகமானோரால் பயன்படுத்தப்படும் தளமாக விளங்குவதால், இந்த புதிய கட்டணச் சேவை முற்றிலும் பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தினால் சாதாரண பயனர்களுக்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும், அவர்கள் எப்போதும் போல இன்ஸ்டாகிராமை முற்றிலும் இலவசமாகவே தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் மெட்டா நிறுவனம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலதிக அனுபவத்தையும், தனித்துவமான பயன்பாட்டையும் எதிர்பார்க்கும் பயனர்களைக் குறிவைத்தே இந்த ப்ரீமியம் சேவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ‘இன்ஸ்டாகிராம் பிளஸ்’ சந்தா திட்டத்தின் மூலம் பயனர்களுக்குப் பொதுவான பதிப்புகளுக்கு அப்பாற்பட்ட கூடுதல் அம்சங்கள் , பிரத்யேகத் தனி விருப்பங்கள் உள்ளிட்ட பல விசேட சேவைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.















