அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நீடித்து வரும் பதற்ற தணிப்புக்கான ‘இறுதியான மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்த உரை’ எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களை நம்ப வேண்டாம் என அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தற்போது இருதரப்புடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மிக அருகில் நெருங்கி வந்துள்ளது’ என பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்றதொரு கருத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியும் வெளியிட்டுள்ளார். ஒப்பந்தம் ‘இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அருகில்’ உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஊடகங்கள் அதன் உள்ளடக்கங்கள் குறித்து ஊகங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஈரான் தரப்பில் இருந்து வெளிவந்த மிகத் தெளிவான இந்த அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் மறுபதிவு செய்துள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி எல்லைக் கோட்டைத் தாண்டவில்லை என வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
















