இரண்டு வார காலத் தாக்குதல்களுக்குப் பின்னர், வார இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, திங்களன்று (27) வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை 5% சரிந்தது.
வர்த்தக அமர்வின் தொடக்கத்தில் முக்கிய ஆதரவு நிலையான 90 டொலருக்கும் கீழே சற்று சரிந்த பிறகு, ஜிஎம்டி (GMT) நேரம் 00:09 மணியளவில் பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 4.89 டொலர் அல்லது 5.05% சரிந்து 91.89 டொலராக இருந்தது.
அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4.67 டொலர் அல்லது 5.23% குறைந்து 84.64 டொலராக இருந்தது.
கடந்த மூன்று வாரங்களாக விலை உயர்ந்த நிலையில் இருந்த இந்த இரண்டு ஒப்பந்தங்களும், தற்போது கிட்டத்தட்ட ஒரு வார காலத்திலேயே மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகி வருகின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்தைக் குறைத்த மோதல் சூழல் செங்கடல் பகுதிக்கும் பரவியதால், உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவிலிருந்து ஆசியாவிற்கு பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் என்ற அளவை எட்டியிருந்தது.
இந்த நிலையில் இராஜதந்திர முயற்சிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் ‘ஃபாக்ஸ் நியூஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை, பதற்றத்தைத் தணித்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வழிவகுக்கும் ஒரு இராஜதந்திரத் தீர்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.















