தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு புலம்பெயர் அமைப்புகள் எவ்வளவு நிதியுதவி வழங்கின என்பதை அர்ச்சுனா தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறப்படும் பட்சத்தில், இதற்கு முன்னர் கிடைத்ததாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது, அது யாருக்கு வழங்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அர்ச்சுனா நேர்மையானவராக இருந்தால் இந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் எனவும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்க முடியாது எனவும் சீலரத்ன தேரர் மேலும் தெரிவித்தார்.
















