மேற்கு சிட்னியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழி அமைப்பிலிருந்து, 2.7 தொன் கொக்கைய்ன் அவுஸ்திரேலியக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது அந்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைக்கு எதிரான மிகப்பெரிய பறிமுதலாகும்.
சுமார் 816 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (433 மில்லியன் பவுண்டுகள் அல்லது 500 மில்லியன் யூரோக்கள்) பெறுமதியான அந்த போதைப்பொருட்கள், லண்டன்டெர்ரியில் உள்ள ஒரு இடத்தில் இருந்த மூன்று சரக்குக் கொள்கலன்களில், நிலத்தடிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டன.
இதன்போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படும் 21 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட போதைப்பொருளை வணிக ரீதியான அளவில் வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு திட்டமிட்ட குற்றக் கும்பலின் உத்தரவின் பேரில், வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள மிட்ஜ் பாயிண்ட் (Midge Point) என்ற சிறிய நகரம் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் இந்தக் கொக்கைன் கடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.















