பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை தாண்டக்கூடும் என்றும், அதிக ஈரப்பதம் காரணமாக உணரப்படும் வெப்பம் அதனைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கடும் வெப்பம் குறித்த ஓரஞ்சு நிற வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், அவற்றில் முதலாவது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய, தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த எச்சரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதுடன், நாளை இரவு 11.59 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த வானிலை அமைப்பு காரணமாக மேல்மட்டக் காற்று கீழிறங்கி, வெப்பத்தை அதிகரிப்பதே இந்த கடுமையான வெப்ப அலைக்கு காரணம் என ரோயல் வானிலை ஆய்வு சங்கத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெப்பம் காரணமாக மக்கள் அதிக உடல்நல ஆபத்துகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதியோர் இல்லங்கள், வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வெப்ப பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளுக்கு மேலதிகமாக, இங்கிலாந்தின் பொது சுகாதார முகமையும் தனது எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA), வெள்ளிக்கிழமை வரை இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓரஞ்சு நிற வெப்ப சுகாதார எச்சரிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















