தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் சர்ச்சைக்குரிய ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்குத் துணையாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு (Park Sung-jae) சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் மாதத்தில், அப்போதைய ஜனாதிபதி யூன் சுக் இயோல் நாட்டில் திடீரென கடுமையான ‘இராணுவச் சட்டத்தை’ அறிவித்து நாடாளுமன்ற முடக்கத்திற்கு முயன்றார்.
எனினும், அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நள்ளிரவில் அவசரமாகக் கூடி வாக்களித்ததையடுத்து, அந்த இராணுவச் சட்ட உத்தரவு வெறும் 6 மணித்தியாலங்களுக்குள் இரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதியின் அரசியல் சதிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவே முன்னாள் நீதியமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின் போது, முன்னாள் நீதியமைச்சருக்கு எதிரான பல்வேறு திடுக்கிடும் ஆதாரங்களை அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.
இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே, அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கூண்டோடு கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படும் அரசியல் கைதிகளை அடைப்பதற்காக, நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் உள்ள இடவசதிகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜே முன்கூட்டியே விரிவான ஆய்வு மேற்கொண்டதை அரச தரப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபித்தது.
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்கிய சியோல் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை எனச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த ஒரு நீதியமைச்சர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்தையே அரசியல் சதிக்கான கருவியாக மாற்றியுள்ளார் என நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
இதன் காரணமாக, அரச தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு நீதிமன்றம் அதைவிட 5 ஆண்டுகள் அதிகரித்து, 25 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தென் கொரிய அரசியல் வரலாற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.















