தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமை தாங்கினார்.

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் தெலுங்கானாவை முன்னணி மையமாக உருவாக்குவதற்கான எதிர்கால திட்டங்கள், முதலீடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் செந்தில் தொண்டமானும் பங்கேற்று தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் அவர் அமைச்சராகவும் ஆளுநராகவும் பணியாற்றிய காலங்களில் முன்னெடுத்த பல்வேறு வெற்றிகரமான திட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அவற்றின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அவருக்கு இந்த அழைப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டப் பகுதிகளுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தியமை, ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, முதியோருக்கான “பின்படி” ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அவரது பணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அத்துடன், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 காலங்களில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுத்தந்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது காணி விடுவிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறான நிர்வாக அனுபவம், சவாலான சூழ்நிலைகளில் எடுத்த தீர்மானங்கள் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, பசுமை வளர்ச்சி பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச மாநாட்டில் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.















