ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூரத் தீவுக்கூட்டம் ஒன்றை நோக்கி நகரும் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் இன்று (10) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது இப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய புயலாக அமையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான காற்று, பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ‘பாவி’ (Bavi) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியானது சனிக்கிழமை அதிகாலையில் ஜப்பானின் சகிஷிமா (Sakishima) தீவுகளுக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்வானுக்கு அருகில் அமைந்துள்ள இத்தீவுக்கூட்டம் ஒகினாவா (Okinawa) மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.
மணிக்கு அதிகபட்சமாக 162 கி.மீ (100 மைல்) வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்தீவுக்கூட்டத்தில் உள்ள இஷிகாகி தீவின் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், இப்பகுதியில் விமான நிறுவனங்கள் பல விமானங்களின் சேவையை நிறுத்திவைத்தன.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்துள்ளதாகவும், இதனால் சுமார் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
அதன் போட்டியாளரான ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ (All Nippon Airways) நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை வரை 160-க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்தது.
இதனால், சுமார் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












