2027ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மற்றும் விவாதங்கள் குறித்த முழுமையான கால அட்டவணையையும் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.
நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு அக்டோபர் மாதம் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 12ஆம் திகதி பட்ஜெட் உரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விவாதங்கள் பின்வருமாறு இடம்பெறவுள்ளன.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்:நவம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும்.
குழுநிலை விவாதம் : நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
டிசம்பர் பாதியில் பட்ஜெட் விவாதங்கள் நிறைவடைந்து, 2027ஆம் ஆண்டிற்கான இறுதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.













